கல்விப்பணிகள்

எமது மாமன்றத்தின் வரலாற்றில் சில மைல்கற்களை மாமன்றத்தின் கல்வி பணிகள் பதித்திருக்கின்றன. மாமன்றக் கல்விக்குழு நாட்டின் பல பகுதிகளிலும் கல்விக்கருத்தரங்குகளை நடத்தி வந்ததுடன் இந்நாட்டு இந்து மாமன்;றங்களின் பிரச்சினைகளை உரிய இடங்களுக்கு எடுத்துரைத்து மாமன்றம் குரல் எழுப்ப வழி செய்தது.

தேவைகள் கருதி மாணவர்களுக்கு செய்து வரும் உதவிகளைத் தொட்டுக்காட்டி இருக்கிறோம். மேலும் ஆண்டாண்டுதோறும் ஆயிரக்கணக்கான இலவச அப்பியாசப் புத்தகங்களை அச்சடித்து அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் வறுமைநிலையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கும் எங்களின் அனைத்து சங்கங்கள் மூலம் வழங்கிவருகின்றோம். இந்த அப்பியாசப்புத்தகங்களில் பஞ்ச புராணத் தொகுப்பும் சேர்க்கப்பட்டிருப்பதுடன் கடந்த ஆண்டு தவத்திரு யோகர் சுவாமிகளின் குருபூசையின் ஐம்பதாவது ஆண்டினை ஒட்டி விசேட அப்பியாசப் புத்தகங்களையும், இந்த ஆண்டு மாமன்றத்தின் 60வது அண்டு பூர்த்தியையொட்டி விசேட அப்பியாசப் புத்தகங்களையும் தயாரித்து விநியோகித்து வருகின்றோம்.

க.பொ.த உயர்தர வகுப்பில் இந்து நாகரீகத்தை ஒரு பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்திற்கு அமைய ஒரு நூல் இல்லாது இருந்தது. இந்த குறையையும் 2014இல் மாமன்றக்கல்விக்குழு நிவர்த்தி செய்து தரமான ஒரு நூலை வெளியிட்டமையும் குறிப்பிடப்படத்தக்கது. மேலும் க.பொ.த. (உஃத) வகுப்பு மாணவர்கள் இந்து சமயத்தை கற்க ஊக்குவித்து பயிற்சிக் கருத்தரங்குகளையும் பல ஆண்டுகளாக மாமன்றக் கல்விக்குழு நடத்தி வருகின்றது. பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஒரு மாவட்டத்தில், பிறமாவட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்விகற்பதில் ஏற்பட்ட தடங்கலைத் தீர்க்கும் முகமாக அப்பிரதேசங்களில் ஒருபாடசாலையிலாவது கா.பொ.த (உ.த) வகுப்பை ஆரம்பிப்பதற்காக, கௌரவ அமைச்சர் மனோ. கணேசன் ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.