சமூகநலன்பணிகள்

மாமன்றம் பல்வேறு வழிகளிலும் வேதனைகளாலும் சோதனைகளாலும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் வாடுகின்ற எமது உடன் பிறப்புக்களுக்கு உதவிகள் வழங்குவதில் கண்ணும் கருத்துமாகச் சேவையாற்றி வந்திருக்கிறோம். மாமன்ற வரலாற்றின் அரைவாசிப்பகுதிக்கு மேல் மாமன்றம் சமூகப்பணிகள் மூலம் இறைபணியில் நின்று இருக்கிறோம். மாமன்றத் தலைமையகக் கட்டிடத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இந்து மக்களின் தேவைகளை உணர்ந்து பாவித்து வருகின்றோம்.

யாழ் மண்ணில் ஓர் அலுவலகத்தை நிறுவி அங்கு இந்து ஆராய்ச்சி நிலையம் சைவவித்தகர் பயிற்சி நிலையம் என்பவற்றை நிறுவி யாழ் மண்ணில் பல்வேறு பணிகளையும் செய்து வருகிறோம். கிழக்கு மாகாணத்தில், மன்னாரில், வன்னியில், மலையகத்தில் எல்லாம் எமது சேவையைப் பரப்பியிருக்கிறோம்.

மக்கள் போரின் கொடுமையால் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதில் மாமன்றம் முன்னோடியாக இருந்தது. வடக்கில் மக்கள் இடம் பெயர்ந்தபோது அவர்களைத் தேடி உதவி செய்தோம்.

பெற்றோர்களின் ஆதரவை இழந்த பிள்ளைகளுக்கு உதவியாக இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியில் இலவச மாணவர் விடுதியை நிறுவி நடாத்துகின்றோம். கடந்த ஆண்டுகளில் அந்த விடுதி உருவாக்கித் தந்திருக்கும் நல்ல பிரஜைகளைப்பார்க்கும்போது இப்படியான புண்ணியப்பணியைக் கூட மாமன்றம் இந்நாட்டில், அதுவும் தென்னிலங்கையில் ஒரு முன்னோடியாகச் செய்ய ஆரம்பித்தமை வரலாற்று முக்கியம் நிறைந்த நிகழ்வாகக் கருத முடிகிறது.

போரினால் வன்னியிலிருந்து தவித்து வெளியேறிய மக்கள், வயோதிபர், தாய்மார், குழந்தைகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவாச்சாரியார்களுக்கும் தாமதியாது ஓடிச் சென்று கைக்கொடுத்து உதவினோம். இப்படியாகத் தொடர்ந்து மாமன்றம் இறைபணியில் நின்று செயற்படுகின்றது. இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இயற்கை அனர்த்தங்கள், முக்கியமாக மண்சரிவு, வெள்ளம், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என எமது உடன் பிறப்புக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த வேளையெல்லாம் ஓடிச் சென்று அவர்களின் பசியைப் போக்க எம்மாலான உதவிகளை வழங்கினோம்.

எமது உடன் பிறப்புக்களுக்காக எங்கள் இதயம் என்றும் துடித்துக் கொண்டிருக்கிறது. 2006ம் ஆண்டில் இதயத்தில் துளை என்ற சோகமான சரித்திரத்துடன் வந்த ஆறு வயதுச் சிறுமிக்கு கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் இருதயச் சத்திர சிகிச்சையை அவசர அவசரமாகச் செய்ய ஆவன செய்து அந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்றியது மாமன்ற வரலாற்றில் ஒரு மகா புண்ணியமான செயல் என்றால் மிகையாகாது. அச்சிறுமி இன்று மிகவும் கெட்டித்தனமாகப் படித்து வகுப்பில் முதலாம் பிள்ளையாக வளர்ந்து கொண்டிருப்பது எங்களின் உள்ளங்களை மகிழ்விக்கும் வெற்றிக்காவியம்.

இப்படிப் பலப்பல மனிதநேயப் பணிகளை ஆற்றிக்கொண்டு அடுத்த தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறோம். இன்னும் பலப்பல புண்ணியச் செயல்களை எமது மாமன்ற வரலாற்றின் ஏடுகளாக எதிர்காலத்திலும் மேலும் வளர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானை வணங்கி நிற்கின்றோம்.