Causes

Home Causes

Warning: Division by zero in /home/hinducongress/public_html/wp-content/themes/achc/single-causes.php on line 52

திருக்கார்த்திகை தீபம்

நமது நாட்டில் கொண்டாடப்படும் தெய்வத்திருநாட்களுள் திருக்கார்த்திகையும் ஒன்று. பௌர்ணமி தினத்தன்று, சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்தில் இருக்கும்போது இவ்விழா கொண்டாடப்படுகின்றது.

ஆதிகாலத்திலிருந்தே மக்கள் அக்கினியைத் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர். பஞ்ச பூதங்களுள் ஒன்றான அக்கினியை மகிழ்விப்பதே இப்பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

நமது புராணங்களும் திருக்கார்த்திகை விழாவுக்கான காரணக்கதைகளை அழகாக வர்ணிக்கின்றன. திருக்கார்த்திகைக்குரிய தெய்வங்களான சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை வழிபடும்படி கூறுகின்றன.

ஒருமுறை, பிரம்மனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் இடையே, தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் தோன்ற, அதுவே பெரும் சண்டையாக மாறியது. அப்போது, அடிமுடியில்லாத பெரும் நெருப்புப் பிழம்பாகத் தோன்றிய சிவபெருமான், தன் அடி அல்லது முடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவர்களே உலகில் பெரியவர் என்று கூறினார்.

 

உடனே பிரம்மன் அன்னப்பறவையாக வடிவங்கொண்டு, அந்த ஒளித் தூணின் திரு முடியைக் காண மேல் நோக்கிப் பறந்து சென்றார். மகாவிஷ்ணு வராஹ ( பன்றி ) உருவம் எடுத்து பாதாள லோகம் வரை தோண்டிச் சென்று அந்த நெருப்புத் தூணின் பாதத்தைக் காண முயன்றார். ஆனால், இருவராலும், இறைவனின் அடி, முடியைக் காண முடியவில்லை. சிவபெருமான், அவர்களின் அறியாமையை நீக்கி, ” யாரும் யாருக்கும் பெரியவரல்ல; அனைத்துக்கும் முழுமுதலான பரம்பொருளே பெரியவர்” என்று உணர்த்தி ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தந்த திருநாளே திருக்கார்த்திகை தீபத் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது.

சிவபெருமான் ஜோதியாகத் தரிசனம் தந்து, பார்வதி தேவிக்குத் தம் உடலின் இடது பாகத்தைத் தந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்ததும் திருக்கார்த்திகை நன்னாளில் தான்.

சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாக உதித்த சண்முகக் கடவுளைத் (முருகப்பெருமான்) தாலாட்டி, சீராட்டி, பாலூட்டி வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள்.

அவர்களால் வளர்க்கப்பட்டதால் முருகப்பெருமானுக்குக் கார்த்திகேயன் என்ற பெயர் உண்டாயிற்று.

தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு சிறப்பளிக்கும்விதம், கார்த்திகை மாதம் பௌர்ணமியோடு கூடிய திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் அகல் விளக்கேற்றி அதன் தீப வடிவில் தன்னை வழிபடுவோர்க்கு நலன்கள் யாவும் தருவதாக முருகப்பெருமான் அருள் புரிந்தார்.

அதன்படியே, திருக்கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானையும் வழிபடுகின்றோம்.

ஒருமுறை சரஸ்வதி தேவிக்குத் தெரியாமல் பிரம்மன் யாகம் நடத்தினான். இதையறிந்த சரஸ்வதி, யாகத்தை அழிக்க மாயநலன் என்ற அரக்கனை ஏவினார். அவன் யாகத்தைத் தடுக்க, உலகம் முழுவதையும் இருட்டாக்கினான்.

பிரம்மன் விஷ்ணு பகவானை வேண்ட, மகாவிஷ்ணு ஜோதியாகத் தோன்றி ஒளிவீசி, இருளை விரட்டி, யாகத்தைக் காத்து அருள் செய்தார். இப்படி ஜோதியாகத் தோன்றிய மகாவிஷ்ணுவைத் தீபத்தின் உருவில் வைஷ்ணவர்கள் வணங்குகின்றனர்.

தென் இந்தியாவில், திருவண்ணாமலை என்ற திருத்தலத்தில் உள்ள உயர்ந்த மலையின் உச்சியில் மிகப்பெரிய நெய்தீபம் ஏற்றி இறைவனை வழிபடுகின்றார்கள். இது அற்புதமான திருக்காட்சியாகும்.

திருக்கார்த்திகை வழிபாடு

கார்த்திகை மாதம், பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கார்த்திகை விழா ஆரம்பமாகி, சிவா கார்த்திகை, விஷ்ணு ( பெருமாள் ) கார்த்திகை, குப்பை கார்த்திகை என்ற மூன்று திரு நாட்களாகக் கொண்டாடப்படுகின்றது.

திருக்கார்த்திகைத் திருநாளில் அதிகாலை நேரத்தில் வீட்டை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும்.

ஜோதியாகத் தோன்றிய சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும், கார்த்திகேயனையும் வணங்க வேண்டும். அன்றைய நாளில், தீபங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தீபமேற்ற உகந்த நேரம் மாலை வேளை என்பதால், மாலையில் அந்தி சாயும் நேரத்தில் வீடுகளில் தீபமேற்றி வழிபட வேண்டும்.

திருவிளக்கிலிருந்து அகல் விளக்குகளை ஏற்றி, அனைத்து அறைகளிலும், வாசலிலும் வைத்து, நம் இல்லத்தில் நிறைந்திருக்கும் தீப ஒளியையே இறைவனின் ரூபமாகக் கருதி வழிபட வேண்டும்.

குறைந்தபட்சம் இருபத்தியொரு தீபங்களாவது ஏற்றி வழிபட வேண்டும்.

பின்னர், தலைவாழை இலை விரித்து, அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, கார்த்திகைச் சிற்றுண்டிகளாகிய கொழுக்கட்டை, பொரி, பிரசாதங்களோடு, பழ வகைகளும் படைத்து, மாவிளக்கு ஏற்றிவைத்து, முதலில் பிள்ளையாரை வணங்கிப் பின்னர் இறைவனைப் பூஜிக்க வேண்டும். ” தீப மங்கள ஜோதி நமோ நம ” என்ற தீப வழிபாட்டுப் பாடலைப் பாடிப் பூஜை செய்தால் மிக்க நல்லது.