Causes

Home Causes

Warning: Division by zero in /home/hinducongress/public_html/wp-content/themes/achc/single-causes.php on line 52

நாக, கருட பஞ்சமி

ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும்.

ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும்.

சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.

இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.

விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.

கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, சுபர்ணீ என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், சுபர்ணீ அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், சுபர்ணீ க்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் சுபர்ணீ தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள்.

கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான்.

அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான்.

தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.

இந்த நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களைக் கடைப்பிடிப்பதால், குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும், மகிழ்ச்சியும் ஏற்படும்.