அதர்மம் அழிந்து, தர்மம் வென்று, அதனால் உலகம் செழிக்க வேண்டும் என்று உணர்த்தும் தெய்வத்திருவிழாக்களில் நவராத்திரியும் ஒன்று. ஆதி பராசக்தியை சரஸ்வதி தேவி, லக்ஷ்மி தேவி, துர்க்கா தேவி ஆகிய அவளின் மூன்று அம்சங்களாகப் போற்றி வழிபடுவதே இந்த நவராத்திரிப் பண்டிகையின் நோக்கம்.
நவராத்திரி ஒரு வருடத்தில் நான்குவித நவராத்திரிகளாகக் கொண்டாடப்படுகின்றன.
ஆனி மாத அமாவாசைக்குப்பின்னர் வரும் ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி என்றும், புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின்வரும் ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி என்றும், தை மாத அமாவாசைக்குப்பின் வரும் ஒன்பது நாட்கள் மகா நவராத்திரி என்றும், பங்குனி மாத அமாவாசைக்குப்பின் வரும் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி என்றும் அழைக்கப்படுகின்றன.
இவற்றுள், புரட்டாசி மாத நவராத்திரிக்கு மிகுந்த சிறப்பு உண்டு. இப் பண்டிகை ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச நவமி முதல்நாள் ஆரம்பமாகித் தொடர்ந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
மகிஷன் என்ற மகா கொடிய அசுரன் பல காலம் தவமிருந்து, ‘ கன்னிகை ஒருத்தியால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் ‘ என்று வரம் பெற்றான். அந்த அரிய வரத்தின் வலிமையைக்கொண்டு, தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தினான். அந்த மகிஷாசுரனைக் கொல்வதற்காக, அம்பிகையான தேவி பராசக்தி புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் அவதரித்து, ஒன்பது நாட்கள் கடும் தவம் இருந்து, சுக்ல பட்ச அஷ்டமியில் துர்க்காதேவியாகப் போர்க்கோலம் கொண்டு, அசுரனை அழித்தொழித்தாள். அன்னையை அனைவரும் வெற்றித்திருமகளாக, மகிஷாசுரமர்த்தினியாக போற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அன்னை அசுரனை அழித்து வெற்றி கொண்டதைக் கொண்டாடும் பொருட்டே, நவராத்திரிப் பண்டிகையின் இறுதி நாளான பத்தாவது நாளில், விஜய தசமி கொண்டாடப்படுகின்றது. விஜயதசமிக்கு முந்திய ஒன்பது நாட்கள் நவராத்திரித் திருநாட்களாகக் கொண்டாடப்படுகின்றன.
நவராத்திரி நாட்களான ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்துவரும் மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட வேண்டும்.
உலக மக்களுக்கு முக்கியத் தேவைகளான கல்வி ( ஞானம் ), செல்வம், வீரம் ஆகிய மூன்றும் பெற்றுச் சிறந்த வாழ்க்கை வாழ்ந்திட முப்பெரும் தேவியரையும் இப்படி மும்மூன்று நாட்கள் முறைப்படுத்தி வேண்டி வழிபட்டாலும், மூன்று சக்திகளும் ஒன்றான ஆதி பராசக்தி தேவியே என்பதை உணர்ந்து, ஆதி பராசக்தியின் ஒன்பது ரூபங்களை ஒன்பது நாட்கள் வழிபடுவது சிறந்ததாகும்.
நவராத்திரியின்போது, பத்து வயதுக்குட்பட்ட ஒன்பது பெண் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை நாளொன்றுக்கு ஒருவராக நீராட்டி, புத்தாடை அணிவித்து, அவர்களைத் தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இதுபோல் ஒன்பது நாட்களும் அன்னைக்கு விருப்பமான பிரசாதங்களைப் படைத்து வழிபடுவதும் சிறந்ததாகும்.
நவராத்திரிப்பண்டிகையின் போது, வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். ஒன்பது படிகளாக அமைக்கப்படும் இக் கொலுவில் பலவிதமான் தெய்வ, மனித, மிருக, பறவை பொம்மைகளை அழகாக அடுக்கி வைத்துக் கொண்டாடுகின்றார்கள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், மாலை நேரத்தில், வீட்டில் வைத்திருக்கும் கொலு முன்பாகத் திருவிளக்கேற்றி, அம்மன் படம் வைத்து, அன்னையின் திருமுன் அமர்ந்து பக்திப்பாடல்களைப் பாடி முறைப்படி வழிபட வேண்டும்.
முதல் நாள்: அம்பிகையைக் குமாரி வடிவமாக அலங்கரித்து, மல்லிகை மலர் மாலை சூடி வெண்பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
இரண்டாம் நாள்: அம்மனை இராஜராஜேஸ்வரியாக வழிபட வேண்டும். மல்லிகை, துளசி மாலை சாற்றி, புளியோதரை சாதம் படைத்து வழிபட வேண்டும்.
மூன்றாம் நாள்: அம்பிகையைக் கல்யாணி வடிவமாக வழிபட வேண்டும். சம்பங்கி, மரிக்கொழுந்து முதலிய மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.
நான்காம் நாள்: ரோகிணி தேவியாக அம்மனை வழிபட வேண்டும். ஜாதிமல்லிப்பூ மாலை சூடி, கதம்ப சாதம் படைத்து வழிபட வேண்டும்.
ஐந்தாம் நாள்: அன்னையைக் காளிகா தேவியாகப் பாவித்து, பாரிஜாத மலர் மாலை சூட்டி, தயிர்சாதம் படைத்து வழிபட வேண்டும்.
ஆறாம் நாள்: சண்டிகா தேவியாக அம்மனை வழிபட வேண்டும். இந்நாளில், செம்பருத்திப் பூக்களால் அன்னையை அலங்காரம் செய்து, தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.
ஏழாம் நாள்: தேவியை அன்னபூரணியாகப் பாவித்து, தாழம்பூ மாலை சூட்டி, எலுமிச்சை சாதம் படையல் செய்து வழிபட வேண்டும்.
எட்டாம் நாள்: அஷ்ட தேவிகளுடன் எழுந்தருளும் அன்னை துர்க்கா தேவியாக அம்மனை வழிபட வேண்டும். ரோஜாப்பூ மாலை சாற்றி, பாயசம் படைக்க வேண்டும்.
ஒன்பதாம் நாள்: அன்னை காமேஸ்வரி என்னும் சிவசக்தி கோலத்தில், அம்மனை சுபத்திரா தேவியாகப் பாவித்து, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, திரட்டுப்பால் படைத்து வழிபட வேண்டும்.
இவ்வாறு ஒன்பது நாட்களும் அன்னையை ஒன்பது விதமாக அலங்கரித்து வழிபடுவதால், இல்லத்தில் செல்வம், கல்வி, வீரம் ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் நிறைந்து விளங்கும்.
அன்னை பராசக்தி தேவியின் வெற்றித் திருநாளான விஜயதசமியன்று, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து, அக் குழந்தைகளின் கல்விக் கண்களைத் திறப்பதற்கும், அவர்கள் கல்வியறிவில் வெற்றி பெறவும் அன்னை சரஸ்வதி தேவியின் அருளை வேண்டுகின்றார்கள்.
குழந்தைகள் ஒற்றைப்படை வயதாக இருக்கையில் ( குழந்தைகள் ஒரு வயது, மூன்று வயது அல்லது ஐந்து வயதாக இருக்கையில் ) அவர்களைக் கோயிலில் அல்லது வீடுகளில், சரஸ்வதி தேவியின் திரு உருவப்படத்திற்கு முன்பாக, அரிசியைப் பரப்பிவைத்து, அதன்மேல் அந்தக் குழந்தையின் சுட்டுவிரலைப் பிடித்துத் தமிழ் முதல் எழுத்தான ” அ ” எழுத்தை எழுதும்படி செய்கின்றார்கள்.
இதுவே ‘ வித்யாரம்பம் ‘ ( வித்யா + ஆரம்பம் ) என அழைக்கப்படுகின்றது. குழந்தையின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான நன்னாளாகக் கருதப்படுகின்றது.