ஒவ்வொரு தமிழ் வருடமும், தை மாதம் முதல் தேதியன்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தை மாதத்தைத் தமிழர்கள் மங்கள மாதம் என்றும் போற்றுகின்றனர். ‘ தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது, ஆன்றோர்களின் அனுபவபூர்வமான வாக்கு.
சித்திரை மாதம் தமிழ் ஆண்டின் தொடக்கமாக இருந்தாலும், தை மாதத்தையே தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்று சொல்லும்படி, உழவர்கள் ( விவசாயிகள் ) இந்நாளில் பொங்கல் செய்தும், கடவுள் வழிபாடுகள் செய்தும் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். அதிகாலையில் பிரம்மாவாகவும், மதிய வேளையில் சிவனாகவும், மாலையில் விஷ்ணுவாகவும் ஆக, மும்மூர்த்தி ரூபமாக விளங்கும் சூரிய பகவானை இந்நாளில் பூசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சூரியன் தனுசு ராசியிலிருந்து, மகர ராசியில் நுழைகின்ற தை மாதம் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றோம். தைதிருநாளின் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றது.
போகிப்பண்டிகை
பொங்கலுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை. இது மார்கழியின் இறுதி நாள். நமக்கு ஏற்பட்டுள்ள துயரங்களையும், தொல்லைகளையும் போக்கி, தை மாதம் முதல் புது வாழ்வு பிறக்கப் போவதால், இந்நாளை ‘ போக்கி’ என்கிறோம். அந்த ‘போக்கி’ என்ற சொல் நாளடைவில் மருவி, ‘போகி’ என்று அழைக்கப்படுகிறது.
மழைக்கு அதிபதியான இந்திரனுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், மேலும் மழை பொழிந்து பூமி வளம் செழிக்கவும் வேண்டிப் போகிப்பண்டிகையைக் கொண்டாடுகின்றோம்.
தைப் பொங்கல்
சூரிய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தரும் நாளாகும். பொங்கல் தினத்துக்கு முதல் நாளான போகியன்றே பழைய பொருட்களை எல்லாம் கழித்து, வீட்டைச் சுத்தம் செய்து, அலங்காரம் செய்ய வேண்டும்.
பொங்கல் அன்று, அதிகாலை எழுந்து நீராடி, புத்தம்புது ஆடைகளை உடுத்திக்கொண்டு, ஆனந்தம் பொங்க, பொங்கல் திருநாளைக் கொண்டாட வேண்டும். வீட்டு வாசலில் கோலமிட்டு, புதுப்பானையில், புது நெல் அரிசியைக் கொண்டு பொங்கல் செய்து, கரும்பையும், காய்கனிகளையும் படையல் செய்து, சூரியக் கடவுளுக்கு நன்றி கூறி, வழிபடுகின்றோம்.
மாட்டுப் பொங்கல்
உழவுக்கும், தொழிலுக்கும் உபயோகமாக இருப்பன மாடுகள். அதனால்தான் மாட்டுப்பொங்கல் என்று சொல்கிறோம். ‘கோமாதா, நம் குலமாதா’ என்று பசுவுக்குப் பூஜை செய்து வருகிறோம். பசு காமதேனு. காமதேனுவின் உடம்பில் எல்லாத் தேவர்களும், தேவதைகளும் குடியிருக்கின்றார்கள்.
மாட்டுப்பொங்கல் அன்று, பசுக்களைக் குளிக்கவைத்து, விதவிதமாக அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தி வீடுவீடாக அழைத்து வருவார்கள்.
‘பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல்’ என்று வரும் ஓசையும், மாடுகளின் ‘ஜல்ஜல்’ எனும் சலங்கை சத்தமும் கேட்பதற்குப் பேரானந்தத்தைக் கொடுக்கும். மாட்டுப்பொங்கல் அன்று, ‘ஜல்லிக்கட்டு’ ( மாடுகளை விரட்டிப் பிடிக்கும் விளையாட்டு ) நடக்கும். இதனை, மஞ்சு விரட்டு என்றும் கூறுவார்கள்.
காணும் பொங்கல்
மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் ‘காணும் பொங்கல்’ நாள். இந்நாளில், மக்கள் கூட்டம் கூட்டமாக தூரத்தே இருக்கும் கோயில்களுக்கும் , உல்லாச பிரதேசங்களுக்கும் சென்று, கடவுளை வழிபட்டு, இனிய சிற்றுண்டிகளை உண்டு, பலவித விளையாட்டுகளை ஆடி, மகிழ்ச்சியாக இருப்பார்கள்.