Causes

Home Causes

Warning: Division by zero in /home/hinducongress/public_html/wp-content/themes/achc/single-causes.php on line 52

துர்க்கா பூஜை

கொடுமைகள் ஒழிந்து , நன்மை வெற்றி பெற்றதைக் கொண்டாடும் பெருவிழா , துர்க்கா பூஜை . இந்தியாவின் வங்காள மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மிக விருப்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் பண்டிகை இது.

தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதுபோல், மகிழ்ச்சியாக, வெகு சிறப்பாக வங்காள மக்கள் துர்க்கா பூஜையைக் கொண்டாடுகின்றார்கள். இன்று, வங்காளத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லாப் பகுதிகளிலும், எங்கெல்லாம் வங்காளிகள் வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் துர்க்கா பூஜை கொண்டாடப்படுகின்றது.

துர்க்கா தேவி பராசக்தியின் வடிவம். அவள் அழகின் சொரூபம்; வீரத்தின் அவதாரம். அவளது வாகனம், வீரம் நிறைந்த சிங்கம். துர்க்கா தேவிக்கு ஆயிரம் கைகள். ( ஆனால், படங்களிலும், உருவச் சிலைகளிலும் ஆயிரம் கைகளைச் சித்தரிக்க முடியாததால் பத்துக் கைகளை மட்டும் சித்தரிக்கிறார்கள்.) அத்தனை கைகளிலும், வித விதமான ஆயுதங்கள். அவை அனைத்தும் தீமையை அழித்தொழிக்கப் பயன்படும் வலிமை வாய்ந்த ஆயுதங்கள்.

அவளது காலடியில் பெரிய எருமையோன்று வீழ்ந்து கிடக்கிறது. அது மகிஷாசுரனது மாய வடிவம். துர்க்கா தேவியின் கையிலுள்ள திரிசூலம் அந்த எருமையின் உடலைத் துளைத்திருக்கிறது. துர்க்கா தேவியின் தலையில், முடிப்பாகத்திலிருந்து, அவளது கணவனாகிய சிவபெருமானின் முகம் வெளிய தெரியும். அவளது இரு பக்கங்களிலும், அவளது நான்கு குழந்தைகள் அன்புடன் அமர்ந்திருப்பார்கள்.

ஞானத்தின் தேவதையான சரஸ்வதி, செல்வத்தின் தேவதையான லக்ஷ்மி, விக்கினங்களை வேரறுக்கும் விநாயகர் , போர்க்களத்தில் வெற்றியைத் தரும் முருகப்பெருமான் ஆகிய நால்வர்தான் அவர்கள். துர்க்கா பூஜையின்போது இந்த உருவத்தைத்தான் வங்காள மக்கள் களிமண்ணால் செய்து, வண்ணந்தீட்டி, அழகுற அலங்கரித்து, விழாக் கொண்டாடுகின்றார்கள்.

மகிஷன் என்ற கொடிய அசுரன் ( = அரக்கன் ) தனது கொடுமைகளால் உலகங்களைக் கலங்க வைத்தான். பூவுலகத்து மக்களையும், தேவ உலகில் வாழும் தேவர்களையும் தனக்கு அடிமைகளாக்கினான். தேவர்களின் அரசனாகிய இந்திரனை விரட்டி விட்டுத் தானே அவனது சிங்காசனத்தில் அமர்ந்து, மிகவும் கொடிய விதத்தில் ஆட்சியை நடத்தினான்.

அவனை வெல்ல எவராலும் முடியவில்லை. பிரம்மாவின் தலைமையில், தேவர்கள் திரண்டு சென்று, சிவபெருமானிடமும், மகாவிஷ்ணுவிடமும் முறையிட்டு அழுதார்கள்.

மகிஷாசுரனது கொடுமைகளைக் கேள்விப்பட்டபோது, சிவனும், விஷ்ணுவும் அடக்க முடியாத கோபம் கொண்டார்கள். அந்தக் கோபம் ஒரு கோடி சூரியர்களின் பிரகாசத்துடன் சகல உலகங்களிலும் பரவியது. அதன்பின், அந்த ஒளி ஓர் அழகிய பெண்ணாக உருவெடுத்தது. அவளே துர்க்காதேவி.

ஒளியிலிருந்து பிறந்த அந்தத் தேவிக்குத் தேவர்கள் பட்டாடைகளையும், தங்க நகைகளையும் வழங்கினார்கள். இமயமலையின் தெய்வமான இமவான், துர்க்காதேவிக்கு, வீரம் நிறைந்த சிங்கத்தை வாகனமாகக் கொடுத்தான்.

துர்க்கா தேவி தனது ஆயிரம் கைகளிலும் ஆயிரம் வகையான ஆயுதங்களை ஏந்தி, மகிஷனைப் போருக்கு அழைத்தாள். மகிஷன் பலவிதமான மாய உருவங்களை எடுத்து அன்னையுடன் போராடினான். உக்கிரமான சண்டை நடந்தது. இறுதியில், துர்க்கையின் வாள் அவனது உயிரைக் குடித்தது.

அவளது திரிசூலம் அவனது உடலில் பாய்ந்தது. கொடுமை ஒழிந்தது. நல்லவர்கள் யாவரும் நலமடைந்து மகிழ்ந்தார்கள். தங்களைக் காத்து ரட்சித்த அன்னையைப் போற்றிக் கொண்டாடினார்கள். இதுதான் துர்க்கா பூஜையின் வரலாறு. தீமைகள் ஒழிந்து, நன்மைகள் ஓங்கிய கதை இது.

புரட்டாசி மாதத்து அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறையில் தொடங்கிப் பத்து நாட்கள் துர்க்கா பூஜை கொண்டாடப்படுகின்றது. இந்தப் பத்து நாட்களிலும், மக்கள் ஒன்று சேர்ந்து அன்னையின் அழகிய உருவங்களைச் செய்து, ஊரெங்கும் வைப்பார்கள். பெரிய பாத்திரங்களில் சுவையான விருந்து படைத்து அனைவர்க்கும் வழங்கி மகிழ்வார்கள்.

அனைவரும் புத்தாடை அணிவார்கள். ஏழைகளுக்கும் புத்தாடைகளை வழங்குவார்கள். யாவரும் தேவியைப் போற்றி மகிழ்ச்சியுடன் தெருவெங்கும் வலம் வருவார்கள். தேவியின் திருவிளையாடல்களை விளக்கும் நாடகங்களையும், நடனங்களையும் நடத்துவார்கள்.

முதல் ஒன்பது நாட்கள் இவ்வாறு மகிழ்ச்சியுடன் பூஜைகள் செய்து, விருந்து உண்டு, விழாக் கொண்டாடியபின், பத்தாம் நாள், அன்னையின் திரு உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடல், ஆறு முதலிய நீர்நிலைகளில் கரைத்து விடுவார்கள்.