Causes

Home Causes

Warning: Division by zero in /home/hinducongress/public_html/wp-content/themes/achc/single-causes.php on line 52

விநாயக சதுர்த்தி

நாம் எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்குமுன்னர் விநாயகரைத்தான் முதலில் வணங்கித் தொடங்குகின்றோம். அதற்குக் காரணம், விநாயகர்தான் விக்கினங்களைத் தீர்க்கும் முழுமுதற் பரம்பொருள். ( விநாயகரை நாம் பிள்ளையார், கணேசர், ஐங்கரன் என்று பல பெயர்களில் அழைத்து வணங்குகின்றோம் )

ஆவணி மாதத்து அமாவாசைக்குப்பின் நான்காவது நாள் வரும் சுக்ல பட்ச சதுர்த்தி நாடெங்கும் விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில், மகாராஷ்டிரர்கள் இதை கணேஷ சதுர்த்தி என்று அழைக்கிறார்கள்.

யானைமுகக் கடவுளாகிய விநாயகர், துன்பங்களைப்போக்கி இன்பம் அளிப்பவர். ஆகவே, அவருக்கு விக்னேஸ்வரர் என்றும் ஒரு பெயர் உண்டு. விக்கினங்களைப் போக்கும் விநாயகரை வழிபடும் விநாயக சதுர்த்தி நாடெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று. இந்தியாவில், மராட்டிய மாநிலத்தில் இப்பண்டிகை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை இது. அதிகாலையிலேயே எழுந்து நீராடித் தூய்மை அடைவார்கள். வீட்டையும், வாசலையும் சுத்தப் படுத்தி, மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பார்கள். முக்கியமாக, குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான்.

விநாயக சதுர்த்தியன்று, கடைவீதிச் சந்தையில் கூட்டம் அலை மோதும். முதல்நாள் இரவே வண்டிவண்டியாகக் களிமண்ணைக் கொண்டுவந்து குவித்து வைத்துக் கொண்டு, விநாயகர் பொம்மைகளை அச்சுகளில் தயாரித்து விற்பனை செய்வார்கள்.

விநாயகர் உருவங்களில்தான் எத்தனை வகை ? மூன்று ரூபாயிலிருந்து, முன்னூறு ரூபாய்வரை விலைக்குப் பிள்ளையார் உருவச் சிலைகள் பல வண்ணங்களில் கிடைக்கும். விநாயக சதுர்த்தியன்று மண் பிள்ளையாரைப் பூஜிப்பதே சிறந்ததாகக் கருதப்படுகிறது. வீட்டிலேயே களிமண்ணை உருட்டி வளைத்துப் பிள்ளையார் உருவத்தைச் செய்து வழிபடுவதும் உண்டு.

மரப்பலகையில் கோலம் இட்டு, அதன்மீது தலை வாழை இலை விரித்து, மண் பிள்ளையாரை அதின்மேல் வைத்து, எருக்கம்பூ மாலை, வண்ணக்காகிதக் குடை மற்றும் பலவிதமான மலர்மாலைகளும், ஆபரணங்களும் அணிவித்து, விநாயகரை அலங்கரிப்பார்கள்.

பிள்ளையாருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் விருப்பமானதாகும். அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய், எள்ளுருண்டை முதலியனவும் விருப்பமான பிரசாதங்களாகும். பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல், எருக்கம்பூ என்பன விசேஷமான பொருட்களாகும்.

நைவேத்தியங்கள் தயாரானதும், பூஜை ஆரம்பமாகும். பிரார்த்தனைகள், பாடல்கள், பஜனைகள் நடத்தப்படும். அவரவர் வழக்கப்படி பிள்ளையாரை பக்தியுடன் வழிபடுவார்கள். தோப்புக்கரணம் போட்டு வணங்குவார்கள். உடல் தரையில் படும்படி வீழ்ந்து வணங்குவார்கள்.

விநாயக சதுர்த்தியின்போது, வீடுகளில் சிறிய பிள்ளையார் உருவங்களை வைத்து வணங்கும் அதே வேளையில், கோயில்களிலும், வீதிகளிலும் பெரிய பெரிய பிள்ளையார் உருவச் சிலைகளை வைத்து வணங்குவது வழக்கம்.

இந்த உருவச் சிலைகள் பலவிதமான வடிவங்களில், மக்களின் கற்பனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கும். மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று இந்தப் பிள்ளையார் உருவங்களைத் தரிசித்து, வணங்குவார்கள்.

விநாயக சதுர்த்தியன்று, நிறைய பிள்ளையார்களைத் தரிசிப்பது நமக்கு நல்ல பயனைத் தரும் என்பது உண்மை. ஆகவே, பலரது வீடுகளுக்கும், கோயில்களுக்கும், வீதிகளுக்கும் சென்று, நூற்றியெட்டு பிள்ளையார் சிலைகளைத் தரிசனம் செய்வார்கள்.

முதல்நாள் காலையில் பூஜையை முடித்து மாலையில் விநாயக தோத்திரப் பாடல்களைப்பாடி, கற்பூர தீபம் காண்பித்து, ஆரத்தி எடுக்கவேண்டும்.

மறுநாள் புனர்பூஜையைக் கொண்டாட வேண்டும். தயிர்சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பிறகு, பிள்ளையார் சிலைகளைக் குளத்திலேயோ, கடலிலேயோ அல்லது ஆற்றிலேயோ கரைத்து விட வேண்டும்.