Causes

Home Causes

Warning: Division by zero in /home/hinducongress/public_html/wp-content/themes/achc/single-causes.php on line 52

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

பூவுலகில் எப்போது தர்மம் தலை சாய்ந்து, அதர்மம் தலை தூக்குகின்றதோ, அப்பொழுது, தர்மத்தை நிலைநாட்டக் கலியுக வரதனாக, கருணைக்கடவுளாக, கண்கண்ட தெய்வமாக, துஷ்ட சங்காரனாக, சிஷ்ட பரிபாலனாக ஸ்ரீ மகாவிஷ்ணு அவதாரம் செய்கிறார்.

அதன்படி, ஸ்ரீ மகாவிஷ்ணு, தட்சிணாயனத்தில் ஆவணி மாதம், ரோஹிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில், ஒரு நள்ளிரவில், கொடியவனாகிய கம்சனின் சிறைச்சாலையில், வசுதேவருக்கும், தேவகிக்கும் தெய்வக்குழந்தையாகப் பிறந்தார். கம்சனால் கொல்லப்படாமல் காப்பாற்றுவதற்காக, வசுதேவர் குழந்தையைக் கோகுலத்துக்கு எடுத்துச் சென்றார். அங்கே, நந்தகோபருக்கும், யசோதைக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்து, கொடிய கம்சனை வதம் செய்து, பின்னர், பாண்டவர்களுக்காககுருக்ஷேத்திரப் போர் நடத்தி வெற்றி கண்டார்.

பூவுலகில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த திருநாளை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என்றும், கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகின்றனர்.

 

பிறந்த உடனேயே பேசியவன் கிருஷ்ணன் (கண்ணன் என்பது இன்னொரு செல்லப்பெயர்) என்று சொல்லுவார்கள். நாம் பிறவிப்பயனை அடைவதற்கு ” சகலமும் நானே, சர்வம் கிருஷ்ணார்ப்பனமஸ்து” என்று அருள்வாக்குச் சொன்னவன் கிருஷ்ணன். நான்கு திருக்கரங்களுடன் பிறந்த கிருஷ்ணன், நான்கு வேதங்களுக்கும் நாயகனாக விளங்குகின்றான். கருமை நிறத்துடன் பிறந்த கிருஷ்ணன், மூன்று உலகங்களுக்கும் ஞான ஒளி காட்டும் தீபப் பிரகாச வண்ணனாகக் காட்சி அருளுகின்றான்.

கிருஷ்ணன் பிறப்பின் மகிமையைப் போற்றுவதோடு, அவனுடைய புகழைப்ப் பாடி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடி, நம் இல்லங்களுக்குக் குட்டிக்கண்ணனை வரவேற்கிறோம்.

சிறு பிள்ளையாய் இருந்த கண்ணன் பெரும் குறும்புக்காரன். அவன் அடுத்த வீடுகளுக்குள் நுழைந்து, உறியிலிருந்து வெண்ணெய் திருடும்போது, வெண்ணெய் கீழே சிந்தி அதில் அவன் பாதச் சுவடுகள் பதிந்து இருக்குமாம். அந்த அடையாளத்தை வைத்து, திருட்டுக்கண்ணன் தங்கள் வீட்டில் வெண்ணெய் திருடியிருக்கிறான் என்று கோகுல வாசிகள் அறிந்து மகிழ்ச்சி அடைவார்களாம்.

 

இதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே, பண்டைய காலங்களில், கிருஷ்ணன் பிறந்த நாளன்று, வீடுகளில் வெண்ணையினால் கண்ணனின் பாதச் சுவடுகளை வரைவதைப் பழக்கமாகக் கொண்டனர்.

கோகுலாஷ்டமி தினமான புண்ணிய தினத்தில், நாமும் நம் இல்லங்களை நன்கு கழுவிச் சுத்தம் செய்து, கண்ணனை நம் வீட்டுக்கு வரவழைக்கும்விதமாக, வீட்டு வாசலிலிருந்து பூஜையறை வரையிலும் மாக் கோலத்தால் கண்ணனின் பாதச் சுவடுகளை வரைகின்றோம்.

ஒரு பலகையைக் கழுவிக் கோலமிட்டு, அதில் கிருஷ்ண விக்கிரகம் அல்லது படத்தை வைத்து, சந்தன , குங்குமப் பொட்டு வைத்து, பூமாலைகளால் அலங்கரிக்க வேண்டும்.

கண்ணன் வெண்ணெய்ப் பிரியன் என்பதால், கண்ணனுக்குப் பால் , தயிர், வெண்ணெய் , அவல், பழங்களை வைத்துப் படைக்க வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தையாக யசோதையிடம் வளர்ந்தபோது , குழந்தையின் உடம்புக்கு நோய் வராமல் இருக்க சத்து நிறைந்த சீடை, முறுக்கு முதலிய சிற்றுண்டிகளை அளித்தாள். அதனால், பூஜையின்போது இச் சிற்றுண்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பின் , கிருஷ்ணனுக்குத் தூப , தீபங்கள் காட்டி ஆராதித்து வழிபாடு செய்ய வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் , இரவு முழுவதும் பூஜை மற்றும் பஜனைப் பாடல்கள் நடத்தப்படுகின்றன.

கண்ணன் பிறந்த பொன்னாளை உற்சவமாக, உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல் முதலிய பல விளையாட்டுகளையும், ஆடல் பாடல்களையும் செய்து கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று, காலை முழுவதும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து கிருஷ்ணனின் கதைகளைக் கேட்டு மகிழ்வர். பூஜையின்போது ஸ்ரீ கிருஷ்ண அஷ்டகம் சொல்லி வழிபடுவது மிகவும் சிறந்தது.

கோகுலாஷ்டமி ஒருநாள் முழுவதும், அந்தப் பாலகிருஷ்ணனையே நினைத்து, ” ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ” என்று அவனது திருநாமத்தையே நினைவில் கொண்டு அனுஷ்டிக்கும் விரதம் பல்லாயிரம் ஏகாதசி விரதங்கள் அனுஷ்டிப்பதற்குச் சமமாகும்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி குழந்தைகளுக்கு மிக விசேடமானதொரு நாளாகும். அன்று குழந்தைகளுக்கு பாலகிருஷ்ணனைப் போல் வேடமணிந்து மகிழ்வர். குழந்தைகள் விரும்பும் அத்தனை சிற்றுண்டிகளையும் தயாரித்து, குழந்தைகளுக்குக் கொடுத்து ஆனந்தமாயிருப்பார்.